Wednesday, November 09, 2016

வார்தைகளின் வார்த்தைகள்



எல்லா இடத்திலும் எல்லோரிடத்திலும் எல்லோராலும் ஒரே மாதிரி இருந்துவிட முடிவதில்லை , ஆளுக்கேற்ற மாதிரி ஆடை உடுத்தி இடத்திற்கேற்ற மாதிரி நடிக்க வேண்டிய நாகரீக கோமாளிகளாகத்தான் நாமனைவரும் இருக்கிறோம், "உண்மையாக யாருமே இல்லை" என வருத்தப்படுகிறவர்களால் கூட உண்மையான முகங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதும், அவர்களால் கூட உண்மையான முகத்துடன் எப்போதும் இருக்க முடிவதில்லை என்பதும் தான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

அவன் ஒரு நடிக்கத்தெரியாத அப்பாவி, மிக எளிதில் மனமுடைந்து போகும் இலகுமன பிராணி , ஆளுக்கேற்ற மாதிரி பச்சோந்தியாக தெரியாத படுபாவி., போலிகளை கண்டு கண்டு கடுப்பாகி வெறுப்பின் உச்சத்தில் யாவரையும், யாவற்றையும் வெறுத்து ,தனது நம்பிக்கையை வார்த்தைகள் கொண்டு கிழித்தெறிந்து எரித்தழிக்க முயல்கிறான் அவன் . வார்த்தைகள் மெல்ல மெல்ல அர்த்தமிழந்து அவனிடத்தில் மௌனமாகிப்போய் நிற்கிற போது அவன் வார்த்தைகளை வார்த்தைகளால் ஏசுகிறான்... (வார்த்தைகளும்  வாய்திறந்து அவனோடு பேசின ...)

ஏய் வார்த்தைகளே !!
ஏய் வார்த்தைகளே !!

உங்களை வீசித்தானே எல்லோரும்
காரியம் சாதித்துக் கொள்கிறார்கள் !
என் கைக்கு மட்டும் ஏன் உங்களை
வீசி எரியும் வித்தை வாய்க்கவில்லை

உங்களை கொண்டு தானே
என்னை ஏமாற்றுகிறார்கள்
ஏன் நீங்கள் என்னிடத்தில்
வாய் திறந்து சொல்லவில்லை !

உங்களை நம்பித்தானே
என்னையே மறுதலித்து
என்னையும் அடமானம் வைத்தேன்
ஏன் நீங்கள் தடுக்கவில்லை !

அவனி முழுக்க நிறைந்திருக்கும்
அத்தனை வர்த்தைகளும்
ஆதரவேதுமின்றி !
அர்த்தமிழந்து அலையட்டும் !

ஹ்ம் ..

உங்களை ஏசக் கூட
உங்கள் உதவிதானே
தேவைப்படுகிறது
எங்களுக்கு !
அந்த திமிரோ ?

உங்களையே சேர்த்து
உங்களிடத்தில் கேட்கிறேன்
உள்ளது உள்ளபடி
உண்மை சொல்வீர்களா ??

உங்களின் நிரந்தர இருப்பிடம் எங்கே ?
எங்கே இருக்கிறீர்கள் நீங்கள் ?
பேச்சின் பின்னாலா ?
எழுத்தின் பின்னாலா ?
வாசிப்பின் பின்னாலா ?

பின்னும் நாங்களில்லை
முன்னும் நாங்களில்லை
எல்லாமும் எல்லோரும்
எங்கள் பின் இருப்பதனை
அறியாயோ மானிடனே !
சர்வம் வார்த்தை மயம் !!

உங்களைக்கொண்டு தானே
நாங்களே பேசிக்கொள்கிறோம்
நீங்கள் கூட பேசுவீர்களா?
இத்தனை கால மௌனம்
உடைபட்ட மாயம் ?

இதுவரைக்கும் எம்மை யாரும்
உம்மைப்போல எரித்ததில்லை
உண்மையைச் சொல்லச் சொல்லி
உலுக்கியும் எடுத்ததில்லை.

ஓ!
அழுதிட்ட பொழுதுகளில்
அறுதலாய் வரவில்லை
அடித்துலுக்கிக் கேட்கையிலே
பதில் சொல்ல வந்தீர்களோ??

பேசப்படும் பொருளும்
பேச்சும் பொருளும் நாமே !!
பேச்சில் மறைந்திருக்கும்
சத்தமும் அமைதியும் நாமே !!

கேட்கிற சக்தியிருந்தால்
கேட்கமலேயே கேட்கும்
நாங்கள் கூறும்
ஆறுதல்கள் அறிவுரைகள்
அமைதியான பேருரைகள் !

ஏனெனக்குக் கேட்கவில்லை?

அழுகிற பொழுது அழுகையிலும்
சிரிக்கிற பொழுது சிரிப்பினிலும்
பேசுகிற போழுது பேச்சினிலும்
எதன்போதும் ஏதோ ஒன்றால்
எப்போதும் எம் குரலை
மறைத்து விடுகிறீர்கள் !!

மறுபடியும் உம்மை கேட்கிறேன்
ஏனெனக்கு
உங்களை வீசியெறிந்து
காரியம் சாதித்துக் கொள்ளும்
வல்லமை வாய்க்கவில்லை?

யாருக்கும் கேட்டிராத எம் குரலை கேட்பவனே !!
வல்லமை இல்லையென்று
சொன்னவன் எவனுனக்கு !!
எதைக் கொண்டு எமையிழுத்தாய் !

 எப்போதும் எம்மருள் தப்பாது உமக்குண்டு !
 ஒரு நிமிசம்....
 கயவர்களுக்கும் கூட
 உன் வல்லமை வாய்த்திருக்கிறதே ??
 காரணம் ??

 எம்மை நம்பி வாய்திறக்கும் யாவருக்கும்
 நன்று தீது பாராமல் எங்களருள் கிடைப்பதுண்டு !!

 எல்லோர் வார்த்தைகளையும் நம்பி விடாதே
 ஆனால் வார்த்தைகளின் உள்ளிருக்கும்
 வார்த்தைகளின் வார்த்தைகளை நம்பு !!....
 வேறு யாரோ கூப்பிடுகிறார்கள்
 வருகிறோம் !!!!
    
   

 

Post Comment

2 comments:

  1. // வார்த்தைகளின் உள்ளிருக்கும்
    வார்த்தைகளின் வார்த்தைகளை நம்பு !! //

    அப்படிச் சொல்லுங்க...!

    ReplyDelete
  2. வார்த்தைகள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மையே நண்பரே...

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....