Sunday, November 20, 2016

அன்புள்ள திரைப்பட ரசிகனுக்கு

முன் குறிப்பு:

உனக்கொரு கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டுமென்றெனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு குட்டி ஆசை . இதென்ன விசித்திரமாய் ஓர் ஆசை என யோசிக்க மாட்டாய் என நம்புகிறேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

நலம், நலமே விழைகிறேன்.,

நீ செய்த உதவிகளுக்கும், உனக்கும் நான் நிறையவே கடன்பட்டிருக்கிறேன். Thank you for being a friend of mine.

நீ அதிகமாக நேரம் செலவிடும் அந்த சில பேரின் சராசரி தான் நீ , என்றொரு வாசகம் உண்டு. அது உண்மையோ, பொய்யோ, அதை நான் நம்புகிறேன். எனக்குத்தெரிந்து என்னுடன் மணிக்கணக்கில் காலம் தெரியாமல் பேசும் நபர்களின் பட்டியலில் உனக்கொரு இடமுண்டு. அந்தவகையில் யோசித்தால் என்னில் உன் குணங்கள், வார்த்தைகள்,பேச்சு,ரசனை,சிந்தனை என்கிற வகையில் சில துளிகள் "நீ" கலந்திருக்கலாம். இந்த வினாடியில் நம் ராமேஸ்வரம் ரபி அண்ணன் சொல்லும் "நானாகிய நீ" என்கிற வார்த்தையின் அர்த்தச் செழிப்பை வியக்கிறேன், ஒருவகையில் நாம் எல்லோருமே "நாமாகிய யாரோ" தான் இல்லையா.  காதலி ,நன்பன், ரோல்மாடல், அப்பா, நடிகன் இப்படியாக... எத்தனை பேரின் சாயங்கள் நம்மில் நம்மையேயறியாமல் பூசப்பட்டிருக்கிறது.

நீ கொடுத்த "பிங்க்" திரைப்படத்தை நேற்று தான் பார்த்தேன், எனக்கும் படம் பிடித்திருந்தது. நல்ல திரைப்படம். அருமையான வசனங்கள், நேர்த்தியான காட்சியமைப்புகள், Fantastic characterization .இதுபோன்ற திரைப்படங்கள் தற்போதைய நம் தேசத்திற்கு மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.

பெண்கள் உடுத்தும் ஆடை தான் எங்களை தூண்டுகிறது, அவளின் பேச்சு எங்களுக்கு அவள் அப்படிப்பட்டவள் என நினைக்க வைக்கிறது, அவளுக்கு மது, புகைப் பழக்கம் உண்டு அதனால் அவள் ஒரு --------------, அவள் என்னைப் பார்த்து புன்னகைத்தாள் அதனால் அவள் என்னை காதலிக்கிறாள்,அழைக்கிறாள்,------------ ,--------------- என அநேக விசயங்களில்  அவளின் எண்ணங்களை நமக்கு நாமே கற்பனையாக சில பல கற்பிதங்களின் அடிப்படையில் நினைத்துக்கொள்கிறோம். அவளை தொடுவதில் தவறில்லை என தொட முனைகிறோம்.

" NO Means NO" கோர்ட் சீனில் அமிதாப் பேசும் அந்த கடைசி  வசனம் எத்தனை அழுத்தமானது, பெண்கள் பற்றிய நமது தர்க்கங்கள், சரி, தவறுகள், என்கிற கோட்பாடுகள் அத்தனையையும் தகர்த்தெரியும் வசனம். "அவள் உங்கள் தோழியாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், அடுத்த வீட்டுப் பெண்ணாக இருக்கலாம், உறவுமுறையாக இருக்கலாம், ஒரு விபச்சாரியாக இருக்கலாம்.. அவள் வேண்டாம் என்று சொன்னால் அதற்கு அர்த்தம் வேண்டாம் என்பது தான், NO means NO". நம் தேசத்தில் நாம் பாதுகாக்க வேண்டியது பெண்களை இல்லை ஆண்களை என்கிறது இந்த திரைப்படம்.

"மலரினும் மெல்லியது காமம்-சிலரதன்
செவ்வி தலைப்படு வார் "

என்கிறது திருக்குறள், எத்தகையதொரு சீர்த்த பண்பட்ட நாகரிகத்தினராய் இருந்த நாம் இப்படி சீரழிந்து சிதைக்கப்பட்டிருக்கிறோம் என நினைக்கையில் கோபம் தான் வருகிறது. காமம் என்பது மலரினும் மெல்லியது, சிலரதன் மெய்யறிந்து அதன் முழுப் பயனை அனுபவிக்கிறார்கள் என்கிறான் வள்ளுவன். மலரினும் மெல்லியதென மதிக்கப்பட்ட அந்த வஸ்துவை கொலை ஆயுதத்தினும் கொடியதாய் சித்தரித்து வைத்திருக்கிறோம், எத்தனை தூரம் நம் இனம் கலாச்சாரம் விட்டு பிரிந்து,திரிந்து கேவலப்பட்டு நிற்கிறது,

அக்கால பெண்மணிகள் குடிக்கவில்லை, இக்காலத்து பெண்மணிகள் குடிக்கிறார்கள், கூத்தடிக்கிறார்கள், இப்படிப்பட்டவள்களுக்கு இப்படியெல்லாம் இருக்கிறவள்களுக்கு இப்படியாகப்பட்ட நிலைதான் வரும் என வார்த்தைகளை அள்ளிக்கொண்டு விதண்டாவாதம் பேச வரும் கலாச்சார காவலர்கள் , நம் தமிழ்க் கலாச்சாரத்தில் விரலிக்கூத்து, இந்திரன் திருவிழா ,காமன் பண்டிகை என்றெல்லாம் இருந்ததையும் பெண்களும் கள்ளருந்தி களித்திருந்த கதைகள் கூறும் அகத்திணை இலக்கியங்களையும் படித்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன்.

பார் ! ,எத்தனை தூரம் என்னை யோசிக்க வைத்திருக்கிறது இந்த திரைப்படம் .தேச அளவில் இந்த திரைப்படம் நிறைய விமர்சிக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.


திரைப்படங்கள் மூலம் கருத்து சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா, அது சரியான மீடியம் தானா என்கிற கேள்வி இந்த நேரத்தில் எனக்குள் எழுகிறது. சினிமா ஒரு வெகுஜன ஊடகம் , ஒரே சமயத்தில் பலதரப்பட்ட எண்ண அலைவரிசை உள்ள நிறைய பேர் ஒரே அரங்கில் இருட்டில் பணம் கொடுத்து அமர்ந்து படம் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் அந்த இருட்டறையில் ஒவ்வொரு விசயத்தை எதிர்பார்த்திருப்போம். திரைப்படங்கள் என்பவை ஒரு என்டெர்டெய்னராக இருக்க வேண்டும் என சிலர் நினைத்திருப்போம், அது கலையாம்சமானதாக இருக்க வேண்டும் என சிலர் நினைத்திருப்போம் இருசாராரையும் திருப்தி செய்யவேண்டும் என்கிற முயற்சியில் டைரக்டர் படம் காட்டவேண்டும், இல்லையென்றால் போட்ட காசை எடுக்க முடியாது. இருந்தாலும் திரைப்படங்களுக்கென சில பிரத்யேக குணாதிசயங்கள் இருக்க வேண்டும், களிப்பூட்ட வேண்டும்,கதைசொல்ல வேண்டும், தெரியாத விசயங்களை சொல்ல வேண்டும், சிரிக்க வைக்க வேண்டும்,சிந்திக்க வைக்க வேண்டும் அல்லது எதையாவது ஒன்றை உருப்படியாக செய்ய வேண்டும். திரைப்படம் என்பது வெறுமனே காட்சிகளின் தொகுப்பு அல்ல, Slideshow ல் அடுத்தடுத்த ஸ்லைடுகளை நகர்த்துவது மாதிரி காட்சிகளை நகர்த்திவிட்டு நானும் டைரக்டர் தான் என மார்தட்டிக்கொள்ளும் மடையர்களை பார்க்கையில் சிரிப்பு தான் வருகிறது. AYM திரைப்படம் எனக்கு வெறுமனே காட்சிகளின் நகர்வாகத் தான் கண்ணில் பட்டது. நம் நன்பர்கள் சிலரிடம் படம் எப்படி என்றேன் சிலர்  ஆஹா,ஓஹோ என்றார்கள், சிலர் First half OK, second half சொதப்பல் என்றார்கள், ஒரு தடவை பார்க்கலாம் என்றார்கள்., ஒரு தடவை பார்க்கலாம் என்பதெல்லாம் என்ன மாதிரியான விமர்சனம் என புரிபட மாட்டேன் என்கிறது, அப்புறம் ஒரு திரைப்பட்த்தை First half, second half  என கூறுபோட்டு விமர்சிக்கும் கூறுகெட்ட விமர்சன கர்த்தாக்கள் எல்லாம் எந்த கிரகத்திலிருந்து வந்தார்கள் என தெரியவில்லை, நேற்று நான் சாப்பிட்ட பிரியானி, முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி நல்லா இல்லை என்று சொல்வது எத்தனை அபத்தமோ, ஒரு முழு திரைப்படத்தை பிரித்து பார்த்து விமர்சிப்பதும் அபத்தம் தான் என நான் கருதுகிறேன். இடைவேளை என்பது நம் சவுகரியத்துக்காக விடப்பட்ட்து, படத்தை கூறுபோட்டு பிரிக்கும் குறுக்குக் கோடு அல்ல என்பது எத்தனை பேருக்கு புரியும்.

விகடனில் பஞ்சு அருணாச்சலம் திரைத்தொண்டர் என்றொரு தொடர் எழுதியிருந்தார், வாசித்திருப்பாய் என நம்புகிறேன். அத்தொடரின் இறுதி வாரத்திற்கு முந்தைய வார தொடரில் " இன்று 90 % திரைப்படங்கள் தோற்பதற்கு காரணம் வெறுமனே காட்சிகளை கோர்த்து எழுதுவது தான்" என்கிறார். Absolutely right.

ஆனால் அகிரா குரோஷோவாவின் DREAMS என்று ஒரு திரைப்படம் உண்டு , காட்சிகளின் கோவையாகத்தான் அந்த படம் இருக்கும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு நபருக்கு வரும் வெவ்வேறு கனவுகளின் தொகுப்பு. கனவுகள் எப்படி முழுமையாக இல்லாமல், லாஜிக் இல்லாமல், சம்பந்தா சம்பந்தமில்லாத காட்சிகளை இணைத்து வருமோ, அப்படியே இருக்கும் அந்த திரைப்படம் Segments of dreams., ஆனால் அந்த திரைப்படம் ஆஹா, ஓஹோ வென பேசப்பட்டது, இன்றளவும் உலகப்புகழ் டைரக்டர்கள், திரை விமர்சகர்கள் அந்த திரைப்படத்தை கொண்டாடுகிறார்கள்., ஒரு திரைப்படத்தை சம்பந்தா சம்பதாமில்லாத காட்சிகளின் கோவையாக்க் கூட செய்ய முடியும், உலகப்புகழ் திரைப்படமாக செய்ய முடியும் என்பதற்கு அகிராவின் ட்ரீம்ஸ் ஒரு உதாரணம். ஆனால் அந்த காட்சிகள் நிஜமான கனவுகள் போல இருக்கும், நம் எண்ண ஓட்டத்தை சில கணமாவது நிறுத்தும் வல்லமையோடு இருக்கும், ஒவ்வொரு கனவும் ஒரு கதை போல இருக்கும் நாம் காணும் கனவுகள் மாதிரியே..  அதனால் தான் அந்த திரைப்படம் இன்றளவும் பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

Moving + Pictures இரண்டு வார்த்தைகள் இணைந்து உருவான கூட்டுவார்த்தை தான் Movies என்பது, ஆனால் அதற்கான அர்த்தம் இன்று கொஞ்சம் கெட்டிப்பட்டுவிட்டது. எடிசன் சினிமாவை கண்டுபிடித்த ஆரம்ப காலத்தில் வெறும் சலன காட்சிகளை காண்பதற்கு மக்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்தனர், ஆனால் இன்றும் அதே மாதிரி மான் ஓடுவதையும், நாய் குரைப்பதையும், கால், கைகளை அசைப்பதையும், நடப்பதையும், ஓடுவதையும் தியேட்டர்களில் காண்பித்தால் எப்படி இருக்கும், வெறுப்பாக இருக்காது., திரையை கிழிக்கலாம் என்கிற அளவுக்கு கோபம் வராது, பாதியில் கிளம்பி வந்துவிடவேண்டும் என்று தோன்றாது... "கடவுள் இருக்கிறான் கொமாரு" திரைப்படத்தை பார்த்துவிட்டு என் ரூம் மேட்ஸ் இருவர் பாதியிலேயே எழுந்து வந்துவிட்டார்கள், பணம் கொடுத்த பாவத்திற்காக சிலர் அதை தொடர்ந்திருக்கிறார்கள், அதிர்ஷ்ட வசமாக நான் அந்த படத்திற்கு போக வில்லை. ஏன் இப்படியெல்லாம் பணம் போட்டு படம் எடுத்து ரிலீஸ் செய்கிறார்கள். எந்த நம்பிக்கையில் இப்படியெல்லாம் படம் எடுக்கிறார்கள்.

என்னவென்று தெரியவில்லை உன்னோடு அதிகம் பேசியதிலிருந்து நானும் திரைப்படங்கள் பற்றி அதிகம் பேசுகிறேன், நேற்று வெற்றிவேலுடன் பேசிக்கொண்டிருந்த போது கூட தோராயமாக ஒரு மணி நேரம் திரைப்படம் பற்றி பேசியிருப்பேன். இப்போதெல்லாம் இளைய சமுதாயம் சந்திந்துக்கொண்டால் திரைப்படங்கள் பற்றித்தானே அதிகம் பேசுகிறோம் என அவன் வசவ வேறு செய்தான். ஆனால் பேச்சென்பதன் சாரம்சம் பகிந்து கொள்ளுதல் தானே எதை பகிந்து கொண்டால் என எங்களுக்கு நாங்களே சமாதானம் ஆகிக்கொண்டோம், Caring and sharing இது தானே அன்பின் சாரம்சம், பிடித்ததை பிடித்தவர்களோடு பகிர்ந்து கொள்ளுதலின் ஆனந்தம் அளவற்றது, காதல் என்கிற விசயம் கூட இந்த மையப்புள்ளியைப் பற்றித்தான் நகர்வதாய் நம்புகிறேன்… Caring and sharing.

கடந்த ஞாயிறு யூட்யூபில் ஹெலன் கெல்லரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "The miracle worker " என்றொரு படம் பார்த்தேன்., அருமையான படம், படம் பார்த்து முடித்து விட்டு கீழே கமென்டுகளை நோட்டமிட்டேன், இதே சாயலில் ஹிந்தியில் ஒரு திரைப்படம் இருப்பதாக அன்பர் ஒருவர் கமென்ட் இட்டிருந்தார், இந்திய திரைப்படங்களை பொத்தாம் பொதுவில் திட்டியும் இருந்தார்., அமிதாப் பச்சன் நடிப்பில் "BLACK " என்ற பெயரில் வெளியான அந்த திரைப்படத்தின் கதையை விக்கியில் படித்தேன். அது மிராக்கில் ஒர்க்கர் திரைப்படத்தின் சாயல் இல்லை அப்பட்டமான சாயம் என பட்டது, யாரோ ஒருத்தரின் படைப்பை தன் சொந்த படைப்பு என கொண்டாடுவது தவறு என்றே தோன்றுகிறது, "கதை,திரைகதை,வசனம்,டைரக்சன் " எல்லாம் நானே, என தம்பட்டம் அடித்துக்கொள்வதில் அப்படி என்ன தான் பெருமையோ, கதை வேறொருவருடையது., திரைகதை வேறொருவருடையது, இது இந்த படத்தால் Inspire ஆகி எடுக்கப்பட்டது என்றெல்லாம் ஏன் நம் தேசத்து டைரக்டர்கள் சொல்லிக்கொள்வதில்லை என யோசிக்கத் தோன்றுகிறது.

திரைப்படங்கள் பற்றிய என பார்வைகளை தொகுத்து எனது Blog ல் ஒரு கட்டுரையாக எழுதலாம் என தோன்றுகிறது J , உன் கருத்துக்களை சொல், ஏதாவது நல்ல திரைப்படங்கள் இருந்தால் பகிர்ந்துகொள்.

அன்புடன்,

விஜயன் துரைராஜ்

   

 

Post Comment

1 comment:

  1. நல்ல முயற்சி உடனே துவங்கவும் தொடர்கிறேன்.

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....