Saturday, June 25, 2016

தாய்மொழிப் பற்று அவசியமா ?? (2)

 "மொழி  என்பது வெறுமனே சத்த சமாச்சாரம் அல்ல"


மொழிகள் - உருவங்களற்ற உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும்   உருவம் கொடுத்து உரைக்க உதவி செய்கின்றன.  மனித இனத்தை மிருகக்கூட்டத்திடமிருந்து பிரித்துக் கூட்டி வந்த மேய்ப்பன் மனிதர்கள் பேசின மொழி தான் எனலாம். மனிதன் எப்போது மொழிகளின் அவசியத்தை உணர்ந்து தனக்கே தனக்கென , அல்லது தங்களது கூட்டத்தினருக்கான பிரத்யேக மொழியை உருவாக்கத் துவங்கினானோ அப்போதிருந்துதான் நாகரிக வளர்ச்சி என்பது துவங்க துவங்கியிருக்க வேண்டும் என்பது என் கருத்து.

மொழி எப்படி தோன்றியது ?

மொழி இன்ன தேதியில் இன்ன இடத்தில் இன்னவரால் கண்டுபிடிக்கப்பட்டது என உறுதியாக சொல்லிவிட முடியாது., முந்தின பதிவில் பார்த்தது மாதிரி  மொழிகளின்உருவாக்கத்தில் இனம்,கலாச்சாரம்,காலநிலை,சுற்றுப்புறம்,தட்பவெப்பம்,உணவுப்பழக்கம், என பல்வேறு காரணங்கள் பங்கெடுத்திருக்கின்றன. இந்த பல்வேறு காரணங்கள் கொண்ட பட்டியலின் பலனாகவே மொழி என்பது உருவாகியிருக்கிறது. 

மொழி உருவாக்கத்தின் அடிப்படையான காரணங்கள் மூன்று

1.தகவல் பரிமாற்றம் 
2.தப்பிப் பிழைத்தல் 
3.தகவமைப்பு 


இது பற்றியெல்லாம் விரிவாக பார்க்கலாம் , அதற்கு முன்னால் மிருகங்களின் உலகில் சஞ்சரித்து அவைகளின் மொழிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மிருகங்கள் பேசுமா ? :

மிருகங்கள் பேசுமா ? என சிந்திக்கும் போது முதலில் எனக்கு,  பஞ்ச தந்திரக்கதைகளும் , ஈசாப் நீதிக்கதைகளும் தான் நினைவுக்கு வருகின்றன. :)

சரி,

மொழி என்பது வார்த்தைகள் மற்றும் வார்த்தைகளின் அடுக்குமுறையால் விளையும் அர்த்தங்கள் என சிந்திக்கும்பட்சத்தில் மிருகங்களுக்கு மொழி கிடையாது என சொல்லலாம். அதேசமயம் மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான சமாச்சாரம் என்கிற பட்சத்தில் சிந்திக்கிற போது மிருகங்களுக்கு மொழி உண்டு எனலாம். 


மிருக மொழிகளில் அநேகமாக வார்த்தைகள் கிடையாது, குறியீடுகள், உடலியக்க அசைவுகள், சத்தங்கள் மட்டுமே இருக்கின்றன. (சிம்பான்ஸி, பபூன் குரங்குகள் வார்த்தைகள் மூலம் உரையாடிக்கொள்கின்றன என்கிறார்கள் ஆனால் அவையும் limited தான் 384 வார்த்தைக் குறியீடுகள் இருப்பதாக சொல்கிறார்கள்  ). 

எங்க வீட்டு கிளி பேசுமே !! என யாராவது சண்டைக்கு வரலாம் , கிளிகளைப் பொறுத்தவரையில் அவை எண்ணங்களை ஒலியாக்கி பேசுவதில்லை, வெறுமனே சத்தங்களாகவே புரிந்து கொண்டு பேசுகின்றன. தீவிர பயிற்சி மூலம் கிளிகளை நம் மொழியை புரிந்துகொண்டு பேச வைக்க முடியும்.

சில ஆராய்ச்சியாளர்கள்   மிருக உலகத்திற்குள் சஞ்சரித்து அவற்றின் மொழியை கஷ்டப்பட்டு புரிந்து கொண்டு நம் மொழியோடு ஒப்புமைப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள். தேனீக்களின் நடன மொழியை கண்டுபிடித்ததற்காக ஒரு ஆராய்ச்சியாளருக்கு நோபல் பரிசெல்லாம் கூட கொடுத்திருக்கிறார்கள். 

*******

மிருக மொழி - சில சுவாரஸ்யமான தகவல்கள் :

நாய் மொழி :

நம் கண்களுக்கு தினந்தோறும் தரிசனம் தந்து கொண்டு இருக்கும் நாய்களைப்பற்றி,   அவைகளின் பரிபாஷைகள் பற்றி பேசாமல் போனால் இந்த கட்டுரை அதன் ஜென்ம சாபல்யத்தை அடையாது போகலாம்.

முன்பின் அறியாத புது நபர்களை கண்டால் குரைக்கும், தெரிந்தவர்கள் வந்தால் வாலாட்டும், பிரியமானவர் வந்தால் வாஞ்சையோடு வாலாட்டி துள்ளிக்குதிக்கும்..  நாயுலகில் நாமறிந்த மொழி  இவ்வளவாகத்தான் அநேகமாக இருக்கும்.

நாய்களின் மொழியில்  இன்னும் கூட விசயங்கள் இருக்கிறது, கீழே இருக்கும் படங்களை கவனியுங்கள்.



சிம்பான்சி, உராங்குட்டான் ரக குரங்குகளுக்கு, நாய்களுக்கு, யானைகளுக்கு, டால்பின் களுக்கு மனித மொழியை கற்றுக்கொள்ளும் அறிவு இருக்கிறது, அவைகளால் பேச முடியவில்லை என்றாலும் புரிந்து செயல்படும் வகையில் பழக்கப் படுத்த முடியும். (மிருகங்கள் மொழியை வார்த்தைகளாக அல்லாமல் சத்தங்களாகவே புரிந்து கொள்கின்றன).

சிம்பான்சிகளை மனிதர்களோடு உரையாடும் வகையில் உருவாக்கப்பட்ட வார்த்தைகள் (வார்த்தைக்குறியீடுகள் - lexigrams) கொண்ட அட்டையின் உதவியோடு மனிதர்களோடு பேச வைக்க முடியுமாம்.


           பயிற்றுநர்  Sue_Savage உடன் Bonobos குரங்குகள்_Panbanisha_&_Kanzi _2006

மிருக மொழி பற்றி தேடி தேடிப் படித்துக்கொண்டிருக்கையில் என்னை மிக ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜந்து அலெக்ஸ் எனும் கிளி ,

ஆப்ரிக்க கிளி  அலெக்ஸ் (தோற்றம் :1967 மறைவு:2007)
                                       
ஒரு செல்லப்பிராணிகள் கடையில் இந்த கிளியை வாங்கி ஐரின் பெப்பர்பெர்க் என்ற அந்த மொழியியல் வல்லுநர் அதற்கு அலெக்ஸ் என பெயர் வைத்த போது இதன் வயது 1. அலெக்ஸ் (Alex என்ற பெயர் Avian -பறவை, Language- மொழி, Experiment -ஆராய்ச்சி என்பதன் சுருக்க வார்த்தை acronym). பயிற்சி - பயிற்சி - இடைவிடாத பயிற்சி.
                                                                     

கையில் ஏதாவது ஒரு பொருளை நீட்டி இது என்ன, என்ன நிறம், எத்தனை, என்ன வடிவம் என கேட்டால் கேட்கிற கேள்வியை மிகச்சரியாக புரிந்து கொண்டு பதில் சொல்லியது (ட்ரெய்னிங்க் அப்படி). உன்னுடைய நிறம் என்ன என கேட்டால் க்ரே என சொல்லுமாம். உலகில் தன்னைப்பற்றி பேசிய மனிதனல்லாத ஒரே உயிரினம் இந்த கிளி தான் என்கிறார்கள். அதுமட்டுமின்றி இல்லாத பொருளைப் பற்றி கேட்டால் அதை இல்லை என சரியாக சொல்லி இருக்கிறது,  உதாரணமாக அந்த இடத்தில் வாழைப்பழங்கள் இல்லை என வைத்துக்கொள்வோம், இங்கு  எத்தனை வாழைப்பழங்கள் உள்ளன எனக்கேட்டால் , வாழைப்பழங்கள் இல்லை என சொல்லியிருக்கிறது (பூச்சியத்தை புரிந்து கொண்ட ஒரே மனிதனல்லாத உயிரினம் என்கிறார்கள்).
 
எத்தனை சிகப்பு !! எத்தனை ஊதா !! ( பயிற்றுநர் பெப்பர்பெர்க் உடன் அலெக்ஸ்)

தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தால் , அல்லது அது அயர்வாக உணரும் சமயங்களில் "i wanna go " என சொல்லிவிட்டு கூண்டுக்கு நகர்ந்துவிடுமாம்.

6 வரையிலான எண்கள் , 7 நிறங்கள், 5 வடிவங்கள், நூற்றுக்கணக்கான வார்த்தைகள், 50 வகையான பொருட்களை அடையாளம் காணல், குட்டிக்கணக்குககள் என ஒரு ஐந்து வயது குழந்தைக்கான அறிவு அந்த அலெக்ஸிற்கு இருந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளார்கள்.

இந்த ஜந்துவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள: http://alexfoundation.org/

இது ஒரு புறம் இருக்க ஐன்ஸ்டீன் என்ற பெயருடைய இன்னொரு கிளி பல குரல்களில் பேசி அசத்துகிறது.

பொதுவாக மனிதர்களைத் தவிர்த்து மனிதர்களைப் போல பேசத்தெரிந்த ஒரே ஜீவராசிகள் பறவைகள் தான் , காகங்கள், (பாரதியாரின் காக்காய் பார்லிமென்ட் கதை நினைவுக்கு வருகிறது :) )  மைனாக்குருவிகள், போன்றவைகளுக்கும் பயிற்சி கொடுத்தால் பேச வைக்க முடியுமாம், ஆனால் கிளிகள் தான் கெத்து காட்டுகின்றன.

என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இன்னொரு மொழி, தேனிக்களின் நடன மொழி.

*******

தேனீக்களின் நடன மொழி : 

தேனீக்கள் நடன அசைவுகள் மூலம் பேச்சில்லாமலேயே  பேசிக்கொள்கின்றன என்பதை கேள்வியுறும் போது "அட !! " சொல்ல தோன்றுகிறது.

அப்படி என்ன தான் நடன மொழியியின் மூலம் அவை பேசிக்கொள்கின்றன.

உணவு இருக்கும் இடத்தை ஒரு தேனி அறிந்து கொண்ட உடன் உணவிருக்கும் இடத்தை அது தன் கூட்டுக்குச் சென்று  உடனிருக்கும் தேனிக்களுக்கு உடலசைவுகளாக உணர்த்துகின்றன.

தேன் அங்க இருக்கு !!
                                                   
ஒரு நாள் ஆஸ்திரேலிய உயிரியலாளர்  Karl Von Frisch தோட்டத்தில் பூக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் , அப்போது பூவில் ஒரேயொரு தேனீ அமர்ந்து தேனருந்தி கொண்டிருந்திருக்கிறது, பின் சில விநாடிகளுக்கு அந்த தேனி மறைந்துவிட்டு இன்னும் சில தேனீக்களின் பட்டாளத்தோடு திரும்பி வந்து பூக்களை மொய்த்துக்கொண்டிருந்திருக்கிறது. தேனை கண்டு சென்ற முதல்  தேனீ எப்படி மற்ற தேனீகளுக்கு தேனிருக்கும் இடத்தை சொல்லியிருக்கும் என ஆராய்ச்சி செய்யத்துவங்கியுள்ளார்.




சூரியனின் திசை, புவியின் ஈர்ப்பு சக்தி, அதன் உயிரி கடிகாரம் (இன்ன இன்ன நேரத்தில் சூரியன் இன்ன இன்ன திசையில் தான் இருக்கும் என்பதை தீர்மானிக்கும் தேனிக்களின் உள்ளார்ந்த அறிவு), புறஉதா கதிர்களை கண்டறியும் திறன், திசை காணும் அறிவு இவைகளை அடிப்படையாகக் கொண்டு தேனிக்கள் நெளிவு சுளிவுகளுடன் கூடிய அந்த நடனத்தை ஆடி அதன் கூட்டில் உள்ள மற்ற தேனீக்களுக்கு சூரியனின் திசையிலிருந்து உணவு இருக்கும் இடத்தின் கோணம், திசை,  தூரம் போன்றவற்றை கூறுகின்றன.

 இந்த வீடியோவைப் பாருங்கள் , விளக்கமாக விளங்கிக்கொள்ள முடியும்.


இந்த நடனமொழியை கண்டுபிடித்து உலகத்துக்கு அறிவித்த ஆஸ்திரேலிய உயிரியலாளர்  Karl Von Frisch க்கு 1973 க்கான நோபல் பரிசு கிடைத்தது .
தேனீ க்களுடன் ...

*******

இது போல ஒவ்வொரு பிராணியும், தாவரமும் தத்தங்களுக்குள் தங்களுக்கே உரித்தான பிரத்யேக, சங்கேத மொழி முறைமைகளைப் பயன்படுத்தி உயிவாழ்தலுக்கு அவசியமான கருத்துக்களைப்   பரிமாறிக்கொள்கின்றன.

அஃறினைகளின் உலகத்தில் புழக்கத்தில் இருக்கும் மொழிகளை ஆராய்ந்து  அவைகளை ரோபட்டுகளுக்குச் சொல்லிக்கொடுக்க முடியுமா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் பிராணிகளின் மொழி நம் மொழி போல விசாலமானவைகள் அல்ல, Limited !  

இரை தேடுதல் ,இணை கவர்தல் , இனம் காணல் என குறுகிய எல்லைகளுக்குட்பட்ட குறைவான குறியீடுகளுடன் இருப்பவை. நம் பேசிக்கொள்ளும் மொழிகள்  போல சிக்கலான  சொல் அடுக்குகள், இலக்கண முறைகள் எல்லாம் கொண்டவைகள் அல்ல.

மனிதர்களைப்போல பள்ளிக்கூடங்கள் நடத்தி அவைகளின் எதிர்கால சந்ததியினர்களுக்கு அவைகள் பாடங்கள் 
சொல்லிக் கொடுப்பதில்லை. மொழியை  குரலாக, எழுத்துக்களாக, வீடியோவாக பதிவு செய்யும் தொழில்நுட்ப அறிவு அவைகளுக்குக் கிடையாது. புதிதாக பிறக்கும் ஒவ்வொரு விலங்குக்கும், தாவரத்துக்கும் inborn ஆகவே, தன்னிச்சையாகவே அதனதன் மொழியறிவும் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 



இன்னும் பேசலாம்....



 

Post Comment

1 comment:

  1. வாவ் ! சூப்பர்ப் ..மிருக பாஷைகள் பல அனிமல்சுக்குண்டு ..பூனைகளும் இப்படித்தான் :)
    கோகோ கொரில்லா சைன் லாங்வேஜ் பேசும் ....ஹாம்ஸ்டர் வகை எலிகள் கூட புத்திசாலிகள் ..
    எல்லா மிருகங்களுக்கும் விசாலமான மொழியில்லைனாலும் மனிதனைப்போல குறுகிய மனமில்லை என்பது 100% உண்மை .தேனீக்களின் நடனம் பிற தேனீக்களை ஈர்த்து கூடி உண்ண உதவுது இயற்கை எவ்வளவு அழகு

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....