Sunday, June 12, 2016

நல்லதங்காள்_கதை


நல்லதங்காள்_கதை :


தமிழகத்தில் பிரபலமான ஒரு சோகக் கதையாகும். நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து இறந்ததாக அவளது கதை சொல்லப்படுகிறது. அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான். நல்லதம்பி-நல்ல தங்காள் வாழ்க்கை சிறந்த அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது.



தற்போது நல்லதங்காள் சிறுதெய்வமாக வழிபடப்படுகிறாள். திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரத்தில் நல்ல தங்காளுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருவிழாவும் நடக்கிறது.

அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்ல_தம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த போதிலும், அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

பஞ்சம் :


திருமணம் ஆன இளம் வயதிலேயே நல்ல தங்காள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ஆனாள். இதில் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள். இந்நிலையில், மானாமதுரையில் மழை பொய்த்ததால் பஞ்சம் தலைவிரித்தாடியது. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மழையே இல்லை. உண்ண உணவு இன்றி மக்கள் பலரும் மாண்டனர். நல்ல தங்காள் குடும்பமும் அந்நிலைக்கு ஆளானது. அவள், அண்ணன் கொடுத்தனுப்பிய சீதனப் பொருட்களை ஒவ்வொன்றாக விற்றாள். ஒரு கட்டத்தில் வீட்டில் எதுவுமே இல்லை என்ற நிலை வந்தது. சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் போனது. மனம் உடைந்த நல்ல தங்காள் தன் ஏழு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தான் பிறந்த அர்ச்சுனாபுரம் கிராமத்துக்கு வந்தாள்.

மூளியலங்காரி :

அப்போது அவளது அண்ணன் நல்லதம்பி வேட்டையாடக் காட்டுக்கு சென்று இருந்தார். அண்ணன் வரும்வரை அரண்மனையில் தங்கி இருக்கலாம் என்று எண்ணிய நல்ல தங்காள் அங்கு சென்றாள். ஆனால் நல்ல தம்பியின் மனைவி மூளியலங்காரியோ, பல நாட்கள் பட்டினி கிடந்த நல்லதங்காளையும், அவளது பிள்ளைகளையும் உண்ண உணவு கூட கொடுக்காமல் அரண்மனையை விட்டே துரத்தினாள்.

தற்கொலை :

மூளியலங்காரியின் கடும் சொற்களால் மனம் உடைந்த நல்லதங்காள் குழந்தைகளுடன் வந்த வழியே திரும்பினாள்.

"எந்த உதவியும் இல்லாமல் இப்படி பரிதாப நிலைக்கு ஆளாகிவிட்டேனே... இனி, யாரை நம்பி நான் வாழப்போகிறேன்? என் பிள்ளைகள் எப்படி வாழப்போகிறார்கள்?" என்று பலவாறு யோசித்தாள்.

அப்போது, அவளது குழந்தைகள், ‘அம்மா பசிக்குது... ஏதாவது வாங்கிக் கொடும்மா...’ என்று அழ ஆரம்பித்து விட்டனர். அவளது கையிலோ பணமோ அல்லது பொருளோ எதுவும் இல்லை.

குழந்தைகளின் பசியைப் போக்க வழி தெரியாமல் தவித்த அவளுக்கு அங்கிருந்த ஒரு பாழடைந்த கிணறு கண்ணில் பட்டது. நேராகக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள்.

பசியால் துடித்து அழுத குழந்தைகளை ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டாள். ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கிப் போட்டு கொன்ற பிறகு, தானும் அதே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.

மனைவியின் உதாசீனத்தால் தனது தங்கை, பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த நல்லதம்பி துடிதுடித்தான்.  அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் 
அந்த கவலையில் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான்

சிவபெருமான்_அருள் :

அண்ணன் - தங்கை பாசம் என்றால் இதுவல்லவா? என்று மெச்சிய சிவனும், பார்வதியும் அங்கே தோன்றினர். தற்கொலை செய்த நல்லதங்காள், அவளது பிள்ளைகளை உயிர் பெறச் செய்ததோடு, நல்ல தம்பியையும் உயிர்ப்பித்தனர்.

அப்போது நல்ல தங்காளும், நல்லதம்பியும், “நாங்கள் இறந்தது, இறந்ததாகவே இருக்கட்டும். மனிதப் பிறவி எடுத்து மாண்டவர்கள் மீண்டும் உயிர் பெற்றார்கள் என்ற வரலாறு ஏற்பட வேண்டாம். எனவே நாங்கள் இறந்ததாக கருதி அருள் புரிய வேண்டும்” என கூறினார்கள்.

சிவனும் அவ்வாறே அவர்களின் வேண்டுகோளை ஏற்றுகொண்டார்.

இந்த ஒரே காரணத்துக்காக நல்லதங்காள் தெய்வமாகிவிட்டாள்.

நல்லதங்காள்_கோயில் :

நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஊர் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வத்திராயிருப்பு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயர் அர்ச்சுனாபுரம். பச்சை ஆடை போர்த்திய வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது அர்ச்சுனாபுரம். அங்கே வயல்வெளிக்கு மத்தியிலேயே கோவில் கொண்டுள்ளாள் நல்லதங்காள்.

கோயில்_அமைப்பு :

நல்லதங்காள் கோவில் அமைப்பு மற்ற கோயில்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாகக் கட்டப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏழு குழந்தைகளின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு தனியே இன்னொரு சன்னதியில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கோவிலுக்குச் சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்து போய்க் காணப்படுகிறது. நல்ல தங்காள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது இங்கேதான் என்று சொல்கிறார்கள்.

விழாக்கள் :

இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், ஒவ்வொரு ஆடி மாதமும் நடைபெறும் பொங்கல் விழாவில் நல்லதங்காளின் உறவினர் வழித் தோன்றல்களாக வந்தவர்கள், மானாமதுரையில் இருந்து இங்கு வந்து விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்தத் திருவிழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அத்துடன், மாதம்தோறும் பவுர்ணமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது.

சிறப்பு :

இந்தக் கோவிலுக்கு வந்து வேண்டினால் குடும்ப உறவு பலப்படும், திருமணமாகாத பெண்கள் வந்து மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கைகூடும், வாழ்வில் நலம் ஏற்படும் என்பது இக்கோயில் பக்தர்களின் நம்பிக்கை.

பயண_வசதி :

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்த கிராமத்திற்குச் செல்ல நேரடியாகப் பேருந்து வசதி இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்துவத்திராயிருப்புக்குச் சென்று, அங்கிருந்து சிற்றுந்து மூலமாக அர்ச்சுனாபுரம் செல்ல முடியும்.


# copy pasted story

 

Post Comment

1 comment:

  1. நல்லத் தங்காள் கதை படித்திருக்கிறேன். படமாகவும் வந்தது என நினைக்கிறேன்.

    இப்பதிவில் ஒரு இடத்தில் நல்ல தம்பி கிணற்றில் விழுந்து இறந்ததாகவும், இன்னும் ஒரு இடத்தில், தங்கை இறந்த சோகத்தில் இறந்ததாகவும் எழுதி இருக்கிறதே.....

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....