Saturday, March 22, 2014

தாய்மொழிப் பற்று அவசியமா ?? (1)



                                    
ண்ணங்கள்,உணர்ச்சிகள்,கனவுகள்,கவலைகள்,சந்தோசங்கள்,கண்ணீர் என கலந்துக்கட்டியாக  பலவற்றை தன் மூலம் வெளிப்படுத்திக்கொள்ள மனித மனம் அமைத்து வைத்திருக்கும் மாபெரும் வெளி மொழி !.

 மொழி என்பதை வார்த்தைகளின் கட்டமைப்பில் உருவானதொரு மாபெரும் கட்டிடம் என்று வரையறை செய்ய முடியும். மொழியின் அஸ்திவாரமாக,சுவராக,என சகலமுமாக வார்த்தைகளே இருக்கின்றன.வார்த்தைகளின் மூலமாக சத்தங்கள் இருக்கின்றன.

பழங்கால மனிதக்கூட்டத்தினரிடம் நாம் தற்போதைய கால கட்டத்தில் பயன்படுத்தும் இந்த பண்பட்ட மொழி வடிவம் இருந்திருக்கும் என்று சர்வ நிச்சயமாக கூறிவிடமுடியாது. சத்தங்களாக மட்டுமே அவர்கள் சங்கதிகளைப் பறிமாறிக் கொண்டிருக்கக்கூடும்.

எண்ணம்- ஒலியாகி, ஒலி- வார்த்தைகளாகி. வார்த்தைகள் -மொழியாக பரிணாமம் அடைந்திருக்க வேண்டும் !

தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் மொழி என்பது கால சக்கரத்தின் சுழற்சியோடு  நாகரிக வளர்ச்சியின் கைகள் கொண்டு உருவாக்கப்பட்ட பானை போன்றது ,சக்கரம் இன்னமும் சுழன்று கொண்டேதான் இருக்கிறது, நாகரிக வள்ர்ச்சியின் கைகளும் பானையை இன்னமும் அழகுபடுத்தியபடியே இருக்கின்றன , பக்குவம் குறையாமல் இருந்து ,சுழன்று கொடுத்து தன்னை புதுப்பித்துக் கொள்ளும்  மொழிகள் நல்ல பானைகளாக இருந்து புதிது புதிதாக பிறந்து கொண்டே இருக்கும் எண்ண நீர்த்துளிகளை சுமந்து செல்ல கருவிகளாக இருக்கின்றன !, அடம் பிடித்து மாற மறுக்கும் மொழிகள் உடைந்த பானைகளாகி,உருமாறி சிதைகின்றன .

 உலகில் தற்போது ஆயிரக்கணக்கான மொழிகள் வழக்கில் உள்ளன, புள்ளிவிவர ஆய்வாளர்களால் கூட எத்தனை என்று துல்லியமாக கணக்கிட்டு கூற இயலவில்லை.

( உலக மொழிகளுக்கான விரிவான விவரப்பட்டியலாக விளங்கும் Ethnologue (published by SIL International) தனது 2009 ஆம் வருட புள்ளிவிவரப் படி 6909 தனிமொழிகள் இருப்பதாக கூறுகிறது, மேலும் இந்த தளத்தில் மொழிகள் குடும்ப வாரியாக பிரித்து வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது )

ஏன் இத்தனை மொழிகள் !! ,உலகம் எங்கும் ஒரே மொழியாக இருந்தால் எவ்வளவு நன்மைகள் இருந்திருக்கும் ??

மொழிக்குடும்பங்கள்



  •  அரேபிய மொழியின் வார்த்தைகளுக்கு எதிரொலிக்கும் தன்மை அதிகம், பாலைவன பிரதேசத்தில் பிரயோகம் செய்ய வசதியாக இப்படியான மொழியை அவர்கள் உருவாக்கியிருக்கக் கூடும்.,

  • அதிகமான குளிரில் சத்தம் கொண்டு பேசுவதென்பது இயலாதது,உடலின் நடுக்கம் வார்த்தைகளிலும் பிரதிபலிக்கும்
    ஆங்கில மொழியில் (ஐரோப்பிய மொழிகளில்) அதிகமாக வாய்திறந்து     பேசும் வார்த்தைகள் இல்லாததற்கும்,அம்மொழி கொண்டிருக்கும்          உச்சரிப்புக்கும் இது கூட காரணமாக இருக்கக்கூடும்.

  • சீன,ஜப்பானிய மொழிகள் ஜிங்க்,ஜங்க்,மங்க்... என இருப்பதற்கும் காரணங்கள் இருக்கக்கூடும்.

  • இன்னபிற இந்திய மொழிகளில் இருந்து தமிழ் மொழி மாறுபட்ட வடிவமைப்பில் இருக்கிறது, எழுத்துக்கள் தேவநகரி முறையில் அமைந்திருக்கவில்லை, இதற்கும் கூட ஏதாவது காரணம் இருக்கலாம்

இப்படியாக...

 வெவ்வேறு பிரதேசத்தினர் வெவ்வேறு மொழிகளை கொண்டிருப்பதற்கு இனம்,கலாச்சாரம்,காலநிலை,சுற்றுப்புறம்,தட்பவெப்பம்,உணவுப்பழக்கம் இப்படி நிறைய காரணங்களை சொல்லிக்கொண்டே போக முடியும், இந்த "நிறைய காரணங்கள்"  என்பவை உலக வரைபடத்தில் ஒரு நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பொறுத்தும், பிற நாடுகள் அதன் மீது செழுத்திய தாக்கங்களைப் பொறுத்தும் மாறுபாட்டுக்கு உட்பட்டது,

உலகத்தவர் எல்லோரும் ஒரே இடத்தில் இருப்பது எப்படி சாத்தியம் இல்லையோ ,அதே போல எல்லோருக்கும் ஒரே மொழி என்பதும் சாத்தியமற்றதே.

மாகாராஸ்ட்ராவின் பேலாப்பூரில் தமிழ்  நன்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன், பேச்சு நாடு,தேசப்பற்று என்று நகரத்துவங்கியது அவர் திடிரென்று உணர்ச்சி பொங்க "இந்தியரிடம் ஒற்றுமை இல்லாததற்கு முக்கியக் காரணம் மொழி தான், இத்தனை மொழிகள் நமக்கு அவசியமா,இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி இருந்தால் பேச,பழக,கருத்துக்களை பரிமாற எவ்வளவு எளிதாக இருக்கும், இவர்களும் வேற்று மொழிக்காரன் என்று வேறு மாதிரியான பார்வை செலுத்தாமல் இருப்பார்கள் இல்லையா, மொழியின் பெயர் கொண்டு சண்டைகள்,பிரிவினைகள் எல்லாம் வராமல் இருக்கும் இல்லையா" என்று கூறினார் !

நாம் பள்ளிக்கூடங்களில் "வேற்றுமையில் ஒற்றுமை" கொண்ட பாரத தேசம் என்று படித்தது, நடைமுறையில் வேறு மதிரியாக இருக்கிறது.என்பது நிதர்சனமான உண்மை.

சரி !

நம் நாட்டில் ஏன் இத்தனை மொழிகள் இருக்க வேண்டும்...

 இன்று நாம் வாழும் இந்தியா என்ற இந்த தேசம், அந்நியர்களின் கையில் அடிமையாக அகப்படுவதற்கு முன் இந்தியா என்ற ஒற்றை தேசமாக இருந்திருக்கவில்லை,  ஐநூறுக்கும் மேற்பட்ட சிற்றரசுகளாக சிதறி கிடந்திருக்கிறது, குட்டிக்குட்டியாக நிறைய நாடுகள் (சமஸ்தானங்கள்) , தனித்தனி ராஜாங்கம், பண்பாடு,பழக்கவழக்கங்கள் என  தனிக்குடித்தனம் நடத்திக்கொண்டிருந்திருக்கின்றன, இந்தியாவில் இத்தனை மொழிகள் (325 மொழிகள் மற்றும் 1652 கிளை மொழிகள் ) இருப்பதற்கான காரணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

இந்திய மொழிகளை கூர்ந்து கவனிக்கும் போது என்னால் ஒரு விசயத்தை அவதானிக்க முடிகிறது.

மலையாள மொழியில் தமிழ் சாயல் இருக்கிறது, கன்னடமும்,தெலுங்கும் பல இடங்களில் தத்தங்களுக்குள் பொருந்திப்போகின்றன (இவைகளின் எழுத்து வடிவமும் கூட கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அமைப்புடையன தான்) , (தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு இவைகளை சகோதரி மொழிகள் என அழைக்கிறார்கள்)
அக்கா தங்கை மொழிகள்


இதே மாதிரி வட இந்திய மொழிகளில் ஹிந்தி,மராத்தி,குஜராத்தி,பெங்காலி  அக்கா தங்கைளாக இருக்கின்றன.

இந்த அக்கா தங்கை எல்லைகளை தாண்டி கொஞ்சம்  யோசிக்கலாம்....

 மகராஸ்ட்ர எல்லைகளுக்கருகேயான கன்னட பாஷை மராத்திய சாயலில் இருக்கிறது,( மராத்திய,ஹிந்தி வார்த்தைகள் கலக்கப்பட்டிருக்கின்றன ) அங்குள்ள மக்களின் உணவு,உடை பழக்க வழக்கங்களும் மராத்தியம் கர்நாடகம் கலந்தனவாக இருக்கிறது. ஆந்திரத்திற்கு அருகேயான தமிழ் பிரதேச மக்களின் மொழியில் ஆந்திர வாசம் அங்கங்கே இருக்கிறது...

 எல்லை வாழ் மக்களின் எப்.எம் ரேடியோக்கள் இரு மாநிலத்திய ஒலிபரப்பையும் கலந்து குழப்பி அடிப்பது மாதிரி  மாநில எல்லைகளில் வாழும் மக்களின் மொழியும் இரு மாநிலத்திய கலவையாகவே இருக்கிறது.

இன்னொரு முக்கியமான விசயம் இந்திய மொழிகளில் .பல மொழிகளுகளுக்கு எழுத்து வடிவம் இல்லை...எழுத்து வடிவம் கொண்டவைகளில் அநேகமானவை சமஸ்கிருத ஒலிமுறையை ஒட்டி உருவான தேவநகரி எழுத்துமுறைமையை பின்பற்றுகின்றன  இந்த முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட எழுத்துமுறைகளை கொண்ட மொழி தமிழ் மட்டுமே (வேறு ஏதேனும் இருக்கிறதா என பார்த்துச் சொல்லுங்க !! )

  இவையெல்லாம் காட்சிக்கு புலனாகும் வகையில் தெரிபவைகள்... இன்னும் கொஞ்சம் ஆழமாக கவனித்தால் இந்திய மொழிகள் எல்லாமும் ஏதோ ஒரு எல்லையில் தொட்டுக்கொண்டிருக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

(அடுத்த பதிவில் இன்னும் விரிவாக இதை அலசலாம் .)
  
பதிவுகளை தவறவிடாது பெற இமெயில் சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்...



 

Post Comment

16 comments:

  1. மொழியால் சண்டைகள், பிரிவினைகள் என்றால் அது வெறி + அறியாமை...

    தமிழ் மொழியின் சிறப்பை சொல்ல எல்லையில்லை...

    ReplyDelete
    Replies
    1. //மொழியால் சண்டைகள், பிரிவினைகள் என்றால் அது வெறி + அறியாமை...// சரி !! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

      Delete
  2. // ஒற்றுமை இல்லாததற்கு முக்கியக் காரணம் மொழி தான், இத்தனை மொழிகள் நமக்கு அவசியமா,இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி இருந்தால் பேச,பழக,கருத்துக்களை பரிமாற எவ்வளவு எளிதாக இருக்கும், இவர்களும் வேற்று மொழிக்காரன் என்று வேறு மாதிரியான பார்வை செலுத்தாமல் இருப்பார்கள் இல்லையா, மொழியின் பெயர் கொண்டு சண்டைகள்,பிரிவினைகள் எல்லாம் வராமல் இருக்கும் இல்லையா //

    ஒரே மொழி இருந்தால் வேற்றுமை இருக்காது என்பது முட்டாள் தனமான வாதம். எமது தாய் மொழி தமிழ் பேசும் தமிழர்களிடம் எத்தனை வேற்றுமைகள்? மேல் சாதி, கீழ் சாதி, ஏழை, பணக்காரன், இந்தியத் தமிழன், இலங்கைத் தமிழன், etc etc.... வேற்று மொழிக்காரன் வேறு மாதிரி பார்ப்பதற்கு காரணம் நமக்கு சொரணை இல்லாதது தான். அதாவது நம்மை பற்றி நாமே தாழ்வாக நினைத்து அடங்கிப் போவது....

    இதை இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழர்களிடம் பரவலாக காணலாம். தமிழில் பேசுவதை தரக்குறைவாக நினைத்து சிங்களத்தில் பேசுவார்கள். தமது வாரிசுகள் சிங்களப் பள்ளிகளில் சிங்களம் படிப்பதை பெருமையாக பேசுவார்கள். தமது பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்று தம்பட்டம் அடிப்பார்கள். அதாவது தமிழ் நாட்டில் இங்கிலீஷ் போல்.

    ReplyDelete
    Replies
    1. ஹலோ,
      கனடாவை பாருங்க, லண்டனை பாருங்க அங்கேயுள்ள இலங்கை தமிழங் தமிழில் பேசுவதை தரக்குறைவாக நினைத்து ஆங்கிலத்திலத்தில் பேசுவார்கள். தமது வாரிசுகள் ஆங்கிலபள்ளிகளில் ஆங்கிலம் படிப்பதை பெருமையாக பேசுவார்கள். தமது பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்று தம்பட்டம் அடிப்பார்கள். மலையகத்தில் வாழும் தமிழர்கள் மிக சரியாகவே நடக்கிறாங்க. அப்படி தான் நடக்கணும்.
      தமிழ் நாட்டில் சொந்த பாஷையையே இழிவுபடுத்தபடுத்தும் தமிழர்களின் கொடுமையை ஏற்று கொள்கிறேன்.

      Delete
    2. ////தமிழ் நாட்டில் சொந்த பாஷையையே இழிவுபடுத்தபடுத்தும் தமிழர்களின் கொடுமையை ஏற்று கொள்கிறேன்.////

      தமிழ்நாட்டுக்காரன் செய்தால் தப்பு, அதையே இலங்கையில் செய்தால் சரியா ?

      ////மலையகத்தில் வாழும் தமிழர்கள் மிக சரியாகவே நடக்கிறாங்க. அப்படி தான் நடக்கணும். ////

      இப்படியான பொன்மொழிகளை எங்கள் நாட்டு தலைவர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதிலும் முக்கியமாக தமிழ்நாட்டிலிருந்து. தொடர்ந்து இப்படியே கருத்துக் கூறினால் அடுத்த ஸ்ரீ லங்கா ரத்னா விருது உங்களுக்குத்தான். (நான் எதோ வெளிநாட்டிலிருந்து இதை சொல்லவில்லை. இங்கே தான் இருக்கிறேன்)

      ////கனடாவை பாருங்க, லண்டனை பாருங்க அங்கேயுள்ள இலங்கை தமிழங் தமிழில் பேசுவதை தரக்குறைவாக நினைத்து ஆங்கிலத்திலத்தில் பேசுவார்கள். தமது வாரிசுகள் ஆங்கிலபள்ளிகளில் ஆங்கிலம் படிப்பதை பெருமையாக பேசுவார்கள். தமது பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்று தம்பட்டம் அடிப்பார்கள்.////

      ஏன் இன்னும் சுவிசிலும் ஜெர்மனியிலும் இருப்பவர்கள் dotch, நோர்வேயில் இருப்பவர்கள் nosk .... இப்படியே சொல்லலாம். ஆனால் இவர்கள் மிகவும் சொற்பம். பெரும்பான்மையினர் அப்படி இல்லை. இதை நான் அனுபவத்தில் சொல்கிறேன். அவர்களின் குழந்தைகள் அனைவருக்கும் தமிழ் பேச தெரியும். நான்கு வயதில் லண்டன் சென்று 24 வருடங்களின் பின்னும், 2 வயதில் ஜேர்மனி சென்று 18 வயதிலும் இங்கு வந்த குடும்ப நண்பர்களுக்கு தமிழ் பேச தெரியும். 25 வருடம் லண்டனில் வசிப்பவர்கள் ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழ் பேசுவார்கள் . கனடா மொன்றியலில் பிறந்து வளர்ந்த தோழியின் 8 வயது மகனுக்கு தமிழில் நன்கு பேச முடியும். இவைகள் சில உதாரணங்கள் மட்டுமே. அவர்கள் அனைவரும் அங்கு நன்றாகப் படித்து நல்ல வேலையில் உள்ளவர்கள் தான். தனது வாரிசுகள் தாய் மொழியை மறக்கக் கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள். பலர் சிறப்பு தமிழ் பள்ளிகளில் தமிழ் படிக்கிறார்கள்.

      புலம் பெயர்ந்த மேலை நாடுகளில் வசிப்போருக்கு அந்த நாட்டு மொழியில் கல்வி கற்பது தவிர்க்க முடியாதது. ஆனால் இங்கு அப்படி இல்லை. தமிழில் உயர் கல்வி வரை கற்க முடியும். மலையகப் பகுதிகளில் உள்ள பல தமிழ் பள்ளிகளை இன்றளவும் மூட விடாது இயங்க வைத்துள்ளதில் பல மொழிப்பற்று கொண்ட தமிழர்களின் அர்பணிப்பும் விடா முயற்சியும் தியாகமும் சொல்லி மாளாது. அப்படி ஒரு சாரார் உயிரைக் கொடுத்து கட்டிக் காப்பாற்றியதை நாம் பயன் படுத்திக் கொள்ளா விட்டாலும் இழிவு படுத்தலாமா?

      தான் விரும்பியதை செய்வதற்கு ஒருவருக்கு உரிமை உண்டு தான், ஆனால் தன் இனத்தையும் மொழியையும் இழிவாக நினைப்பதை எப்படி சகித்துக் கொள்வது? இந்த மனப்பான்மையை இங்குள்ள சிங்களவர், வட கிழக்குத் தமிழர், சோனகர் (தமிழ் பேசும் முஸ்லிம்கள்) மற்றும் எவரிடமும் பார்க்க முடியாது.

      Delete
    3. //தமிழ்நாட்டுக்காரன் செய்தால் தப்பு அதையே இலங்கையில் செய்தால் சரியா ?//
      தமிழகத்தோடு இலங்கையில் தமிழ் பேசுபவர்களை ஒப்பிடுவது சரியானதல்ல. ஆனாலும் கண்டி கொழும்போ தமிழர்கள் தங்கள் பிள்ளைகளைதமிழ் பள்ளிகளில் படிப்பிக்கிறாங்க. சிங்கலவங்க சிங்களத்திலே படிப்பது போல.ஆனால் தமிழகத்தில் பெற்றோர் தங்க பிள்ளைகள் தமிழில் கல்வி கற்பதை விரும்பல்ல. பொரும்பான்மை தமிழர்களின் விருப்பமான சொந்த பாஷை புறக்கணிப்பு ஆங்கில மீதான கவர்ச்சி இவற்றையே நிறைவேற்றி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழக அரசு ,ஆளும் கட்சியும்ம நடிவடிக்கை எடுக்கிறது.
      தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்தாக்கினால் என்ன என்ற ஒரு திட்டமுமிருக்கு தற்போது அதற்கு எதிர்பிருந்தாலும் இன்னும் சில வருடங்களின் பின்பு ஆதரவு தமிழகத்தில் பெருகும் தமிழுக்கு சொந்தமான தமிழகத்தின் நிலை இது .
      அப்படியிருக்க அந்த நாட்டிலே இருக்கிறவன் தமிழ் பேசல இந்த நாட்டிலே இருக்கிறவன் தமிழ் பேச வெட்கபடுறான் என்பது எல்லாம் அர்தமற்றது.
      எப்போது நீங்க சொன்னதின் மீது சந்தேகம் வருகிறது என்றால் கண்டி கொழும்போ பகுதிகளை சேர்ந்தவங்களை தவிர வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழங்க குழந்தைகள் அனைவருக்கும் தமிழ் பேச தெரியும்.
      நானும் பல தடவை இலங்கை போயிருக்கேன் .விமானத்தில் வணக்கம் ஆம் என்று சொல்லதக்கவங்களை தவிர வேறு எந்த வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழங்களை நான் கண்டதில்லை.

      Delete
  3. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கொண்டு எழுதப்பட்ட அழகான பதிவு.. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.. இல்லையேல் தொடரும் என்று போட்டிருப்பதால் அடுத்த பதிவில் எதிர்பார்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. //தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கொண்டு எழுதப்பட்ட அழகான பதிவு..// நன்றி அண்ணா ..
      //இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.. //
      ம்ம் பதிவின் நீளம் அதிகமாகிவிடும் பட்சத்தில் பலர் வார்த்தைகளை வாசிக்காது கடந்துவிடும் வாய்ப்பிருக்கிறது என்கிற பயத்தால் பகுதி பகுதியாக பகிர்ந்தளிக்கிறேன் :)
      // தொடரும் என்று போட்டிருப்பதால் அடுத்த பதிவில் எதிர்பார்கிறேன்...//
      என்ன எதிர்பார்கிறீங்க என தெரியவில்லையே ?? !!

      Delete
  4. //தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கொண்டு எழுதப்பட்ட அழகான பதிவு.. //

    பயபுள்ள நாம் சொல்லாம்னு நினக்குரத எல்லாம் முன்கூட்டியே சொல்லிப்புடுது .

    INTERESTING POST VIJI ....

    ReplyDelete
  5. ஒரு நல்ல தொடருக்கான அத்தியாயமாக தெரிகிறது... வாழ்த்துகள்....!

    ReplyDelete
    Replies
    1. :) வாழ்த்திற்கு மிக்க நன்றி அண்ணா !

      Delete
  6. பேச ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல விடையம்... நானும் இதை ஒரு தொடர் பதிவாகவே எதிர் பார்த்தேன், ஏனெனில் மொழி குறித்த பதிவானது இப்படி தொடங்கி அப்படி முடியும் விடையமல்ல.... சட்டென முடிந்த்தது போல் ஒரு உணர்வு.... மொழி குறித்து பேச நிறைய உண்டு.... சிரத்தையாய் தொடங்கியமைக்கு வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அக்கா மொழி பற்றி பேசினால் நிறைய பேச வேண்டும் ,கண்டிப்பாக அக்கா :) நான் எனக்கு தெரிந்தவரை பேசுகிறேன் ,அலோசனைகள்,கருத்துக்கள் ,கேள்விகள்,ஆராய்ச்சிகள் இருப்பின் பகிர்ந்துகொள்ளுங்கள்.. வாழ்த்திற்கு நன்றி அக்கா

      Delete
  7. நான் மொழிகளை பற்றிய படிப்புகளில் ஆர்வம் உண்டு என்பதாலும் அது சார்ந்த தொழிலில் உள்ளேன் என்பதாலும் பதிவை ரசித்துப் படித்தேன்

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....