Wednesday, November 21, 2012

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம் (பாகம்-11)



கணினி வரலாறு பாகம்-1:

உலகின் முதல் கம்ப்யூட்டர்:
லகின் முதல் கம்ப்யூட்டர் பற்றி உங்களுக்கு தெரியுமா?, இந்த கேள்விக்கு ஏதாவதொரு கருவியின் பெயரை உங்கள் மூளை பதிலாக சொல்லலாம்... நிச்சயமாக அது தவறு .உலகின் முதல் கம்ப்யூட்டர் மனிதர்கள்...!.அட ரொம்ப யோசிக்காதீங்க !.கம்ப்யூட்டர் என்ற பெயர் ஒரு காலத்தில் கணக்கு போடும் வேலை செய்யும் நபர்களை குறிக்க பயன்பட்ட வார்த்தை,அதாவது கணக்கு போடுகிற வேலையை (Computation) செய்த நபர்கள் கம்ப்யூட்டர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.


                           மனித கம்ப்யூட்டர்கள்

 இந்த மனித கம்ப்யூட்டர்கள் ஒரே மாதிரியான கணக்கு போடும் வேலையை,அட்டவனை படுத்துதலை (Tables) திரும்ப திரும்ப செய்ய வேண்டியதாக (Repetitive calculations) இருந்தது.இந்த வேலை இதை செய்யும் மனித கம்ப்யூட்டர்களுக்கு போர் அடிக்க ஆரம்பித்தது. கணக்கு வேலையால் வந்த கடுப்பலைகள்,கணக்கு போடும் வேலையை செய்ய ஒரு கருவி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனித மனத்தை சிந்திக்க வைத்தது.

கம்ப்யூட்டரின் கதை:
 கணினி என்பது கணக்கிடும் கருவியாகத்தான் தன் பரிணாம வளர்ச்சியை துவக்கிற்று.நாகரிகத்தின் பக்கம் நகர ஆரம்பித்த மனிதன் பொருட்களை எண்ண கற்றிருந்தான்.கணக்கிற்கு மனிதன் அப்போது புதியவன்,கணக்கு என்பதும் மனிதனுக்கு புதிது .எண்ணுவதற்கு தன் கைகளிலும் கால்களிலும் உள்ள விரல்களை முதலில் பயன்படுத்தியிருக்கிறான்.பின் சுவற்றில் கோடு போட ஆரம்பிக்கிறான்,அதன் பின் கற்களை கொண்டு எண்ண ஆரம்பிக்கிறான்.கணக்கு போட உருப்படியான கருவி என்று ஒன்றை கண்டுபிடித்தவர்கள் பாபிலோனியர்கள்,அதன் பெயர் அபாகஸ் கி.மு 300 ல் அவர்கள் இந்த கருவியை பயன்படுத்தினர் என்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

                           நவீன அபாகஸ்
அபாகஸின் மேல் அடுக்கில் உள்ள இரண்டு மணிகள் இரு கைகளையும்,கீழுள்ள     5 மணிகள் ஐந்து விரல்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது.

 அதற்கு பிறகு 16 ம் நூற்றாண்டு வரையில் கணிதம் எனும் துறை வளர்ச்சி அடைந்ததே தவிர கணக்கு போட கருவிகள் கண்டுபிடிக்கபடவில்லை.
1617-ல் ஜான் நேப்பியர் என்ற ஸ்காட் விஞ்ஞானி பெருக்கலை எளிதாக செய்ய ஒரு கருவியை கண்டுபிடித்தார்.

                                   ஜான் நேப்பியர் கண்டுபிடித்த பெருக்கல் கருவி
இவர் இந்த கருவியை தந்தம் மூலம் தயாரித்திருந்தார்.இதை நேப்பியர் எழும்புகள் (Napier Bones) என்று அழைக்கிறார்கள்


         நேப்பியர் போன்ஸ் உதவியில் 46732 ம் வாய்ப்பாட்டை கணித்தல்


      ஸ்லைடு ரூல் கருவி

1632 ல் நேப்பியர் கட்டைகளுக்கு பிறகு ஸ்லைடு ரூல் என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது.ஸ்லைடு என்றால் நழுவுதல் என்றும் ரூல் என்றால் அளவி என்றும் அர்த்தப்படுத்தி இதை புரிந்துகொள்ளலாம்.இந்த கருவி  1960 களில் கூட பயன்பாட்டில் இருந்தது.(நாசாவின் ஐந்து அப்போலோ விண்கல ஆராய்ச்சிகளில் இந்த "நழுவுஅளவி" பயன்படுத்தப்பட்டிருக்கிறது, நிலவில் மனிதனை இறக்கும் செயல்முறையின் போதும் இந்தகருவி நாசா விஞ்ஞானிகளால் பயன்படுத்தபட்டதாம் !).

நழுவு அளவிக்கு பின் கியர் வைத்த கணக்கிடும் கருவிகள் வர ஆரம்பித்தன.உலகின் முதல் கியர் வைத்த கணக்கிடும் கருவி கணக்கிடும் கடிகாரம்



               ஸ்கிகார்ட்'ன் கணக்கிடும் கடிகாரம்

இந்த கணக்கிடும் கடிகாரம்1623 ஆம் வருடம் ஜெர்மானிய கல்லூரி பேராசிரியர் வில்லெம் ஸ்கிக்கார்ட்(Wilhelm Schickard ) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.இக்கருவிக்கு கணக்கிடும் கடிகாரம் என்று பெயரிட்டவரும் அவரே !.இந்த கருவி அவ்வளவாக பிரபலமடையவில்லை காரணம் இதன் காரணகர்த்தாவான வில்லெம் ஸ்கிகார்ட் கண்டுபிடித்த  சில வருடங்களிலேயே மரணமடைந்தார்... பிளேக் நோயால்  இதனால் இக்கருவி  மாற்றம் ,ஏற்றம் ஏதும் இன்றி மக்களிடையே பிரபலமடையாமல் போய்விட்டது.

பிளய்ஸி பாஸ்கல் என்ற 19 வயது சிறுவன் வரி வசூல் செய்யும் வேலை செய்து கொண்டிருந்த தன் தந்தைக்கு உதவும் எண்ணத்தில் 1642 ஆம் வருடம் பாஸ்கலின் எனும் கருவியை உருவாக்கி கொடுத்தான்.இந்த கருவியின் உதவியால் கூட்டல் கணக்குகள் மட்டுமே செய்ய முடிந்தது.பாஸ்கல் ஆறு இலக்க கூட்டல் கணக்குகள் செய்யும் விதமாகத்தான் முதலில் இதை வடிவமைத்தார் பின் எட்டு இலக்க கூட்டல் கருவியாக அதை மேம்படுத்தினார்.இந்த கருவி நம் வீடுகளில் இருக்கும் மின்சார மீட்டரில் (டிஜிட்டல் மீட்டர் இல்லை பழைய மீட்டர்) உள்ள மாதிரி எண்கள் சுழன்று மாறும் மெக்கானிசத்தில் இயங்கியது.அதாவது ஒரு சக்கரம் 10 சுழற்சி சுற்றினால் அருகிருக்கும் சக்கரம் ஒரு சுற்று சுற்றும்.
டாக்டர்கள் ஊசி போட பயன்படுத்தும் சிரிஞ்ச்சை கண்டுபிடித்தவர் பாஸ்கல் தான்.அதுமட்டுமில்லை கணிதத்தில் நிகழ்தகவு (Probability Theory) எனும் விசயத்தை கண்டுபிடித்தவர் இவரே !.பாஸ்கல் கண்டுபிடிப்பாளர்,கணிதமேதை மற்றும் தத்துவவியலாளர் என மூன்று பரிணாம மனிதராக இருந்திருக்கிறார் !


                     8 இலக்க பாஸ்கலின் கருவி



          கியர்களுடன் கூடிய கருவியின் உள்ளமைப்பு(6 இலக்க கருவி)



அடுத்த பதிவிலும் கணினி வரலாறு தொடரும்......
வாசகர்களின் தொடர் ஆதரவிற்கு நன்றிகள்., 
கருத்துக்கள்,விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்களை மறக்காமல் கமென்ட் பெட்டியில் கூறுங்கள் அல்லது இமெயில் செய்யுங்கள்!
vijayandurairaj30@gmail.com.

 


 

Post Comment

3 comments:

  1. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

    தொழிற்களத்திலும் வந்ததோ...?

    ReplyDelete
    Replies
    1. ஆம் அண்ணா தொழிற்களத்தில் "திங்கள் கிழமை" தோறும் கடற்கரையில் "புதன்கிழமை" தோறும் வெளியிடப்படுகிறது

      Delete
  2. பயன்னுள்ள பதிவு நன்றி

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....